×

9,868 மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேர நடவடிக்கை

தர்மபுரி, மே 3: தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்த 16,488 மாணவ, மாணவிகளில் 9,868 பேர் உயர்கல்வி படிக்கின்றனர். அவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ், வழிகாட்டிய கல்வி அதிகாரிக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார். தர்மபுரி மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில், சுமார் 13 ஆயிரம் முதல் 17 ஆயிரம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 முடிக்கின்றனர். இவர்களில் சிலர் குடும்ப சூழ்நிலையால் கல்லூரிகளில் முறையாக சேர்வதில்லை. ஒரு சில மாணவிகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. பள்ளி படிப்பை முடித்து, கல்லூரி படிப்பை தொடர முடியாமல் சில மாணவர்கள் நின்று விடுகின்றனர். இதை தவிர்க்க, தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பிளஸ்2 முடித்த மாணவர்கள், உயர்கல்வியில் சேர வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் உயர்கல்வியில் சேருவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படுகிறது.

இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் 2022-2023ம் கல்வி ஆண்டில் 107 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 2 படித்த 16,488 மாணவர்களில், யுஎம்ஐஎஸ் (யூனிவர்சிட்டி மேனஜ்மெண்ட் இன்பார்மேஷன் சிஸ்டம்) தரவுகளின் படி, 60 சதவீதம் (9,868) பேர் உயர்கல்வியில் படித்து வருகின்றனர். இப்பணியை ஒருங்கிணைத்து சிறப்பாக பணிபுரிந்த ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மதுரைவீரனை பாராட்டி, விருது மற்றும் சான்றிதழை கலெக்டர் சாந்தி நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா மற்றும் அவரது நேர்முக உதவியாளர் (உயர்நிலை) செந்தில் ஆகியோர் உடனிருந்தனர். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறியதாவது: 2023-2024ம் கல்வி ஆண்டில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம், உயர் கல்வி தொடராத சூழலில் இருக்கும், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில், கலெக்டரின் வழிகாட்டுதல் படி பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 6 நாட்கள் பயிற்சி நடந்தது. இதில் மொத்தம் 1435 பேர் கலந்து கொண்டனர். மேலும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கல்வியாளர்களை கொண்டு வழிகாட்டும் நிகழ்வு, கல்விக்கடன், மாணவர்களுக்கு தேவையான வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு, அரசு கலைக்கல்லூரிகள், பல்வகை தொழில் நுட்பக்கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் நேரடி சேர்க்கை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘‘கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி மற்றும் நுழைவு தேர்வு எழுத பயிற்சி வழங்கப்பட்டது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்த 9,868 மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிக்கின்றனர். நடப்பாண்டும் இதே போல் உயர்கல்வி படிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் ெதரிவித்தனர்.

The post 9,868 மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேர நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Nan ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தில் 32,258 மாணவர்கள் பயன்